ஞாயிற்றுக்கிழமை, 15 டிசெம்பர் 2013, 08:29 pm
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமான வைத்தியர்களை
நியமிக்காமையினாலும் இங்கு கடமையாற்றுகின்ற சிங்கள வைத்தியர்கள் சிலர் தமது கடமைகளை வினைத்திறனான வகையில் மேற்கொள்ளாமையினாலும் இம் மாவட்டத்தில் வைத்திய சேவைகள் பாதிப்படைந்துள்ளன என வடமாகாண சபை உறுப்பினரான வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.
நிர்வாக ஒழுங்குபடுத்தலின்மை , மருத்துத் தட்டுப்பாடு , பிரதேச வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படாமை , வைத்தியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்கள் நிவர்த்தி செய்யப்படாது இருப்பதால் இம்மாவட்டத்தில் வைத்திய சேவைகளை சிறப்பாக வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற சுகாதார நலத்துறைப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்திய சேவையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக எமது பிரதேச மக்கள் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் . அதற்கமைய நானும் இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளேன். குறிப்பாக மல்லாவி வைத்தியசாலையில் சிங்கள மொழி பேசுகின்ற வைத்தியர்களை நியமித்துள்ளதால் அவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறச் செல்லுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுவருவதாக என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இம் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக எதிர்வரும் தை மாதம் முதலாம் திகதியிலிருந்து வாரத்தில் ஒரு நாள் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வைத்திய ஆலோசனைகளையும் வைத்திய சேவைகளையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளேன்.
இதேபோல் அளம்பில், கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வைத்தியசாலைகளில் போதிய கட்டட வசதிகளும் தளபாட வசதிகளும் காணப்படுகின்ற பொழுதிலும் அங்கு நிரந்தரமான வைத்தியர்களை இன்னமும் நியமிக்காமையால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அளவுக்கு அதிகமாக சுமார் 40 வைத்தியர்களை நியமித்துள்ளனர். இந்த வைத்தியர்கள் தமது கடமைகளில் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களிடமிருந்து எமக்குக் கிடைத்துள்ளது . 40 வைத்தியர்களுக்கு மேல் கடமையாற்றுகின்ற முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்னுமும் அவசர சிகிச்சைப் பிரிவினை அமைப்பதற்கு நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறையாகவுள்ளது.
இதேபோல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையைத் தற்பொழுதும் பிரதேச வைத்திய சாலையாகத் தரமுயர்த்தாது வைத்திருப்பதால் இங்கு சிகிச்சைக்குச் செல்லுகின்ற மக்களுக்கு மருந்துத்தட்டுப்பாடு ஏற்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.
இங்கு தர்மபுரம்,வட்டக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு,கைவேலி,புதுக்குடியிருப்பு, மாத்தலன், இரணைப்பாலை முள்ளிவாய்க்கால் , ஒட்டுசுட்டான் , முத்துஐயன்கட்டு , கச்சிலைமடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறச் செல்லுகின்ற பொழுதிலும் இவ்வைத்தியசாலையைத் தரமுயர்த்தாமல் தொடர்ந்து பிரதேச வைத்திய சாலையாக வைத்திருப்பதால் இங்கு மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்திய சேவைகளைத் தரமுயர்த்துவதற்கு நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமானதாக அமைகின்றது. இதனை நாம் மாகாண சபையின் கவனத்திற்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.





Time in Colombo
0 comments:
Post a Comment