வடக்கு
மாகாணத்தில் சுகாதாரத் துறையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை
சிறிலங்கா அரசாங்கம் மிக விரைவில் நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் வைத்திய
கலாநிதி பி.சத்யலிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட
காலமாக இந்த மாகாணத்திற்கான சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பாக மீளாய்வு
செய்யப்படவில்லை எனவும் பெரும் எண்ணிக்கையான வெற்றிடங்கள் தற்போதும்
பூர்த்தி செய்யப்படாது உள்ளதாகவும் சத்யலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
"வடக்கு
மாகாணத்தில் நீண்ட காலம் நிலவிய போர்ச் சூழல் காரணமாக இங்கு உயர்தரத்தில்
விஞ்ஞானப் பிரிவில் சித்தியெய்தியவர்களின் எண்ணிக்கை போதியதாக இல்லாததன்
காரணத்தால் வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைப் பணியாளர்கள் பற்றாக்குறையாக
உள்ளதாகவும் இதனை சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
விளங்கிக் கொண்டு உயர்தரத்தில் ஏனைய பிரிவுகளில் சித்தியடைபவர்களையும்
தாதியர் பயிற்சிக்குள் உள்வாங்குவதற்கான அனுமதி வழங்கிய போது, இதனை தாதியர்
சங்கம் எதிர்த்தது. இதன்விளைவாக, தற்போது வடக்கில் இரண்டு போதனா
வைத்தியசாலைகள் மட்டுமே உள்ளன. ஒன்று யாழ்ப்பாணத்திலும் மற்றையது
வவுனியாவிலும் உள்ளது. இந்த போதனா வைத்தியசாலைகளுக்கும் ஆண்டுதோறும் 62
மற்றும் 59 பேரே உள்வாங்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்" என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்
அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் கீழுள்ள 99
வைத்தியசாலைகள், 30 சுகாதார மருத்துவ செயலகங்கள் போன்றவற்றில்
பணிபுரிவதற்குத் தேவையான தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் முக்கிய
பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், வைத்திய கலாநிதி சத்யலிங்கம்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளில்
பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இங்கு பணியாளர்
பற்றாக்குறை நிலவுவதாகவும், எடுத்துக்காட்டாக, அண்மையில் பளையில் திறந்து
வைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் மற்றும் நரம்பியல்
சத்திரசிக்கை நிலையத்திலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் சத்யலிங்கம்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்ற
சூழலில், 160 நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கக் கூடிய
வசதிகளுடன் தெல்லிப்பளையில் அடுத்த வாரம் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய
வைத்தியசாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார
சேவைகள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். |
0 comments:
Post a Comment