புதன்கிழமை, 18 டிசெம்பர் 2013,9:59pm
ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், வீரத் கோலி தனது அபார ஆட்டத்தின் மூலம் சதமடித்து நிலை நிறுத்தியுள்ளார். துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 6 ரன்களும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 13 ரன்களும் எடுத்து முறையே மார்க்கெல் மற்றும் ஸ்டெயினின் வீச்சில் ஆட்டமிழந்தனர்.
24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை புஜாராவும், கோலியும் நிலை நிறுத்தினர். நிதானமாக விளையாடி வந்த புஜாரா, கோலியின் தவறான அழைப்பால் ஓடி வந்து மீண்டும் திரும்ப முடியாமல் ரன் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மாவாலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. ஆனால், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே கோலிக்கு நல்ல இணையாக இருந்தார்.
ஸ்டெயின், மார்க்கெல், ஃபிலாண்டர் என எவருக்கும் அசராமல் ஒரு முனையில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் சரளமாகவே ஆடினார் கோலி என்றுதான் சொல்ல வேண்டும். 140 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் கோலி தனது சதத்தை எட்டியபோது அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 71.3 ஆக இருந்தது.
ஒரு நாள் போட்டியில் பெரிதாக சோபிக்க முடியாத நிலையில், முதல் டெஸ்ட் போட்டியிலேயே தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களை அவர்கள் மண்ணில் எதிர்கொண்டு சதமடித்து தன்னையும் இந்திய அணியையும் நிலைநிறுத்தியுள்ளார் கோலி என்றுதான் சொல்ல வேண்டும்.





Time in Colombo
0 comments:
Post a Comment