2013.12.12
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை எட்டுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதான தமிழ்க்கட்சி மீது கொழும்பு கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் றஞ்சித் [Malcolm Ranjith, the archbishop of Colombo] வலியுறுத்தியுள்ளார். அரசியற் தீர்வொன்று எட்டப்படாவிட்டால் அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து ஏற்படும் எனவும் கர்தினால் மல்கம் றஞ்சித் மேலும் எச்சரித்துள்ளார்.
"வெளிநாட்டவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லக் கூடாது. நாங்கள் எமது விவகாரங்களைத் தீர்க்க முடியாதவர்களாக இருக்கக் கூடாது. நாங்கள் நாங்களாகவே எமது பிரச்சனைகளைத் தீர்க்காவிட்டால், வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதற்கு நாமாகவே அனுமதித்தவர்களாவோம்" என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டுப் போரானது 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகள் தமிழ் மக்கள் மீது பல்வேறு மீறல்களைப் புரிந்தன. இதன் விளைவாக 40,000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மக்களின் படுகொலைகள் மற்றும் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
வரும் மார்ச் மாதத்திற்குள் சிறிலங்கா அரசாங்கமானது போர்க் கால மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்காவிட்டால் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் கொடுப்பேன் என கடந்த மாதம் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் உறுதி வழங்கியிருந்தார்.
தன்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்காவானது பொறுப்பளிக்கத் தவறினால் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாது எனவும் இது "சிறிலங்காவின் இறையாண்மைக்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும்" எனவும் கத்தோலிக்க திருச்சபையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பௌத்தர்கள் வாழும் சிறிலங்காவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை மிகச் சிறியளவில் உள்ளபோதிலும், கத்தோலிக்க திருச்சபையானது சிறிலங்கா அரசாங்கம் மீது செல்வாக்குச் செலுத்துவதாகக் கருதப்படுகிறது. கர்தினால் றஞ்சித், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் காணப்படுகிறார்.
சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்களும் சிறுபான்மைத் தமிழ் மக்களும் மீளிணக்கப்பாட்டுடன் வாழ்வது உறுதிப்படுத்தப்படுவதுடன், இருதரப்பு அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு நாட்டில் அரசியற் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு முனைய வேண்டும் என கர்தினால் றஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை சிறிலங்கா அரசாங்கமானது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சபையால் எழுதப்பட்டுள்ள 24 பக்கக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.





Time in Colombo
0 comments:
Post a Comment