s26
பிரபுதேவா என்ன கலைப் படம் எடுப்பவரா? கமர்ஷியல் படங்களில்கூட வில்லு மாதிரியான டப்பாக்களை தயாரிப்பவர். வான்டட் அவரின் முதல் ஹிந்திப் படம். தெலுங்கு போக்கிரியின் ரீமேக் என்பதால் காட்சிகளை மெருகேற்றுவது மட்டுமே பிரபுதேவாவின் வேலையாக இருந்தது. படமும் பம்பர்ஹிட்.
அடுத்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் விக்ரமார்குடு படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். வான்டட் போலவே தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெற்றி பெற்ற படம். அங்கேயும் நூறு கோடி தாண்டி வசூலித்தது. காட்சிகளில் பிரபுதேவா சேர்க்கும் பிரமாண்டமும், நடன அசைவுகளும், காதல் காட்சிகளும் பாலிவுட் தேடிக் கொண்டிருந்த மாஸ் இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. அடுத்து டிப்ஸ் நிறுவனத்தின் வாரிசை நாயகனாக்கி ராமையா வஸ்தாவையா படத்தை இயக்கினார். இது பிரபுதேவாவின் முதல் தெலுங்குப் படத்தின் ரீமேக். தமிழில் உனக்கும் எனக்கும் என ரீமேக் செய்யப்பட்ட படம். பணத்துக்காக பிரபுதேவா ஒத்துக் கொண்ட இப்படம் தோல்வி என்றாலும் டிப்ஸின் வாரிசுக்கு நல்ல அறிமுகத்தை தந்ததாலும், இந்தக் கதை இதுக்கு மேல் வசூலிக்காது என்று தெரிந்து கொண்டே எடுத்ததாலும் அனைவருக்கும் திருப்தி. இந்தப் படத்துக்கு பிரபுதேவா பெற்றுக் கொண்ட சம்பளம் 20 கோடிகள்.ஐந்து பாடல்கள், ஆறு சண்டைகள், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், நிறைய ஹீரோயிஸம். இந்த மசாலாக்களை சேர்த்தரைத்தால் நூறும் இருநூறும் கோடிகள். இது நல்லாயிருக்கே என்று பாலிவுட்டும் மூளையை கழற்றி வைத்து ஒரேயடியாக ரீமேக்கில் இறங்கியது. எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும், எது ஹிந்தி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றெல்லாம் யோசிக்காமல் குப்பையாக குவிந்தன ரீமேக்குகள். அதில் கால்வாசி வெற்றி, மீதி படுதோல்வி. அக்சய் குமார் பண்ண வேண்டிய சாமி ரீமேக்கை தாத்தா சஞ்சய் தத்தை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் எடுத்ததில் படம் அட்டர் பிளாப். தமிழ், தெலுங்கு இரண்டிலும் தோல்வியை சந்தித்த போக்கிரிராஜாவை பாஸ் என்ற பெயரில் ரீமேக் செய்ய அதுவும் ப்ளாப். ரீமேக்கின் கதை இப்படியென்றால் பிரபுதேவா ஜுரத்தில் ஹிந்தியில் எடுத்த பேஷாராம், படா போஸ்டர் நிகிலா ஹீரோ, புல்லட் ராஜா என அத்தனை படங்களும் காலி.
மூன்று ரீமேக் படங்களை இயக்கி ஹிந்தியிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகிவிட்டாரே பிரபுதேவா என்ற கோவம் மீடியாக்களுக்கு. இப்படியொரு சூழ்நிலையில் வந்தது ஆர்...ராஜ்குமார். பிரபுதேவாவே கதை. அவரே வேறு இருவருடன் திரைக்கதையும் எழுதினார். பிரபுதேவா என்ற கதாசிரியரின் அத்தனை பலவீனங்களையும் கொண்ட மைண்ட்லெஸ் ஆக்சன் படம். படம் வெளியானதும் அதுவரை அடக்கி வைத்த கோபத்தையெல்லாம் விமர்சனத்தில் இறக்கி வைத்தன மீடியாக்கள். ஒன்றரை ஸ்டாருக்கு மேல் யாரும் தரவில்லை. அப்படியே மதிப்பெண் போடுவதென்றால் சைபர் போட்டுக் கொள்ளச் சொன்னது ஒரு விமர்சனம். ஆனால் விமர்சனத்தைவிட முக்கியம் பிரபுதேவாவின் வளர்ச்சி.





Time in Colombo
0 comments:
Post a Comment