யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த புதிய காவல் நிலையங்களை அமைக்குமாறு சிறிலங்கா காவல்துறையிடம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்தமாதம் 26ம் நாள் யாழ்.செயலகத்தில் நடந்த யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய காவல் நிலையங்களை அமைக்குமாறும் இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறும் சிறிலங்கா காவல்துறையின் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
அதற்குப் பதிலளித்த பிரதி காவல்துறை மா அதிபர் றொகான் டயஸ், தற்போது யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையங்கள் பல தனியார் வீடுகளிலேயே அமைந்துள்ளதாகவும், அவற்றைத் திரும்ப ஒப்படைக்குமாறு உரிமையாளர்கள் கோரி வருவதாகவும் தெரிவித்தார்.
புதிய காவல் நலையங்களை அமைக்கவும், தற்போதுள்ள காவல்நிலையங்களை இடம்மாற்றவும் அரச காணி அல்லது தனியார் காணியை பெற்றுத்தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து சிறிலங்கா காவல்துறைக்கு அரச காணி அல்லது தனியார் காணியை பெற்றுக்கொடுக்குமாறு யாழ் மாவட்ட அரச அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதான டக்ளஸ் தேவானந்தா சுமத்திய குற்றச்சாட்டையும் சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது. |
0 comments:
Post a Comment