2013.12.12
சென்னை அமைந்தகரையில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, அமைந்தகரை ரயில்வே காலனி 2வது தெருவில் புதிதாக 4 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையே அந்தக் கட்டத்தின் முன்பகுதி அலங்கரிக்கும் இறுதிக் கட்டப்பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் புதன்கிழமை இரவு ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள காட்டுரைச் சேர்ந்த விஜய் (21), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கூணமாஞ்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார் (34) ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
இருவரும் வியாழக்கிழமை அதிகாலை 3 வது மாடியின் முகப்பில் எலக்டரிக் வேலை செய்துக் கொண்டிருந்தனர். இதற்காக அங்கு இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த கட்டத்தின் முன் பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த சீரியல் விளக்குகளின் மின்வயரில், மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கம்பியால் ஆன சாரத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் சாரத்தில் நின்று வேலை செய்துக் கொண்டிருந்த செந்தில்குமார், விஜய் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் உடல் கருகிய நிலையில் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து தகவலறிந்த அமைந்தகரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று இருவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment